×

ஈரோடு உழவர் சந்தையில் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு: பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரசார கூட்டத்தை முடித்துவிட்டு, ஈரோடு வந்த அவர் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.

நேற்று காலை 7.10 மணியளவில் ஈரோடு, சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும். அவர்களது கோரிக்கைள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களில் சிலர் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

உழவர் சந்தைக்கு வந்திருந்தவர்கள், வியாபாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தைக்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அவருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள் சூழ அனைவருடனும் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முதல்வரை நேரில் கண்ட மகிழ்ச்சியில் செல்பி எடுக்க முடியாமல் பதற்றப்பட்டு தடுமாறிய பெண் ஒருவரிடம், அவரது செல்போனை தானே வாங்கி அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், உழவர் சந்தைக்கு வந்திருக்கும் தகவலறிந்த சம்பத் நகர் மற்றும் பல்வேறு பகுதி மக்களும் உழவர் சந்தைக்கு வரும் சாலையின் இருபுறமும் திரண்டு நின்றிருந்தனர்.

உழவர் சந்தையில் இருந்து வெளியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து, அவர்களிடமும் கை குலுக்கி வாக்குச் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ், எம்.பி. அந்தியூர் செல்வராஜ் மற்றும் திரளான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post ஈரோடு உழவர் சந்தையில் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு: பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Erode Farmers Market ,DMK ,M.K.Stalin ,India Alliance ,Salem Pethanayakkanpalayam ,Erode ,M.K.Stal ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...